ஐந்தாம் திருமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐந்தாம் திருமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 மே, 2010

திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம் -தலமுறை - (002)


திருத்தில்லை

திருமுறை : 5 / (2-வது பதிகம்)
பண் : குறிஞ்சி
திருக்குறுந்தொகை

01 பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைதனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

02 தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ.

03 கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி
இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான்
சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை
எள்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

04 மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீண் உலகுஎலம் ஆளக் கொடுத்த என்
ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ.

05 பித்தனைப் பெருங்காடு அரங்கா உடை
முத்தனை முளை வெண்மதி சூடியைச்
சிந்தனைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

06 நீதியை நிறைவை மறைநான்கு உடன்
ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணாச்
சோதியைச் சுடர் செம்பொனின் அம்பலத்து
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ.

07 மைகொள் கண்டன் எண்தோளன் முக்கண்ணினன்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்
செய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள்
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ.

08 முழுதும் வான்உலகத்து உள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
இழுதையேன் மறந்து எங்கனம் உய்வனோ.

09 கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை
வார் உலாம் முலை மங்கை மணாளனைத்
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ.

10 ஓங்கு மால்வரை எந்தல் உற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனைப்
பங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ.



திங்கள், 19 ஏப்ரல், 2010

திருநாவுக்கரசர் சுவாமிகள் -தேவாரம் - தலமுறை (001)


1. திருத்தில்லை

திருமுறை : 5 / ( 1-வது பதிகம்)

திருக்குறுந்தொகை
பண் : குறிஞ்சி

இறைவன்: சபாநாயகர், / திருமூலநாதர்
இறைவி : சிவகாமியம்மை, / உமையம்மை

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே. 1

அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
கரும்பு அற்றப் படத்தூவித் தொழுமினோ
கரும்பு அற்றச் சிலைக் காமைக் காய்ந்தவன்
பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே. 2

அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
எரிச்சுற்றக் கிடந்தார் என்றயலவர்
சிரிச்சுற்றுப் பலபேசப் படாமுன்னம்
திருச்சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே. 3
அல்லல் என்செய்யும் அருவினை என்செய்யும்
தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என்செய்யும்
தில்லைமா நகர்ச் சிற்றம்பல வனர்க்கு
எல்லை இல்லது ஓரடிமை பூண்டேனுக்கே. 4

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என்நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம் பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே. 5

சிட்டர் வானவர் சென்று வரம் கொளும்
சிட்ட்டர் வாழ் தில்லைச் சிறம்பலத்து உறை
சிட்டன் சேவடி கைத்தொழச் செல்லும் அச்
சிட்டர்பால் அணுகான் செறு காலனே. 6

ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்
திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்
விருத்தனார் இளையார் விடம் உண்டஎம்
அருத்தனார் அடியாரை அறிவாரே. 7

விண் நிறைந்தது ஓர் வெவ்வழலின் உரு
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஓணாக்
கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்து
உள் நிறைந்து நின்று ஆடும் ஒருவனே. 8

வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லை வட்டம் மதில்மூன்று உடன்மாய்த்தவன்
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே. 9

நாடி நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும் திரிந்தும் காண வல்லரோ
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே. 10

மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்
சதுரன் சிற்றம்பலவன் திருமலை
அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே. 11




திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 006)

திருச்சிற்றம்பலம் 6. திருத்தில்லை திருமுறை : 4 ( 81 - வது பதிகம்) /  பண் : கொல்லி /  திருவிருத்தம் கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்த...